பெண்ணின் கவின்மிகு பருவங்களின் பரிமாணம்
புதுமைப் பெண் விருது கட்டுரைப்போட்டி
பெண்ணின் கவின்மிகு பருவங்களின் பரிமாணம்
(1)
தந்தை மடியமர்ந்து,
தாயின் கரம் பற்றி,
பிஞ்சு கால்களால் நடை பயின்று,
மழலை மொழி பேசி,
"மூன்றாம் பிறையில் தொட்டில் கட்டி முல்லை மல்லிகை மெத்தையிட்டு தேன்குயில் கூட்டம் பண்பாடும்
இந்த மான்குட்டி கேட்டு கண் மூடும்" பாடலை முணுமுணுக்க வைத்து அத்தை மடியும் தேடி
பள்ளி செல்ல துவங்கி
எடுத்ததற்கெல்லாம் அடம்பிடித்து கேள்விக்கணைகளால் துளைத்து சொற்களின் கருவூலமாகி
தந்தையை மட்டும் மேதையாய் நினைக்கும் 1-7 வயது உள்ள
முதல் பருவமே........*பேதை*
(2)
சுற்றும் ரசிக்க,
சிட்டுக்குருவியாகச் சிறகடித்து, வண்ணத்துப்பூச்சியாக
இல்லத்தை நந்தவனம் ஆக்கி,
பேருவகையோடு பெற்றோரின் அக்கறை தனில் வைகறை கண்டு, கொக்கோ /கண்டுபிடி விளையாட்டுகளை குழுவில் ஆடி, "சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு தென்றலே உனக்கெது சொந்த வீடு உலகம் முழுதும் பறந்து பறந்து"
எனும் பாடலைப் பாடி,
8- 11 வயதைக் கடக்கும்
இரண்டாவது பருவமே ....*பெதுமை*
(3)
மலரின் வாசத்தை கூந்தலில் தாங்கி, மருளும் மானை விழியில் காட்டி, மெருகூட்டும் வெட்கத்தை
பூமிக்கு விதைத்து,
தாய் மாமன் பச்சை ஓலை
கட்டுதலான பூப்பெய்தி,
நாணத்திற்கு துணை போகும் தாவணி சுற்றி,
"அரைத்த சந்தனம்
மணக்கும் குங்குமம்
அழகு நெத்தியிலே!
ஒரு அழகு பெட்டகம்
புதிய புத்தகம்
சிரிக்கும் பந்தலிலே!"
பாடலை நினைவூட்டி ,
பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி ,
அகவை 15 ஐக் கடக்கும்
மூன்றாம் பருவமே.......*மங்கை*
(4)
காதலைக் கருவாக்கி,
பாசத்தை அதில் தோய்த்தெடுத்து, "நலம் நலம் தானா முல்லை மலரே? சுகம் சுகம் தானா முத்துச்சுடரே?" என்பது போன்ற
காதல் கடிதம் பெற்றாலும்
"மனசோ தடுமாறும்
அது நெனச்சா நிறம் மாறும்
மயக்கம் இருந்தாலும்
ஒரு தயக்கம் தடைப்போடும்"
என குடும்பத்தின் கௌரவம் காத்து, பிறந்த வீடு உவகை கொள்ள, கடமையை கருத்தில் கொண்ட மிதர்ப்போடு நடந்தே கடக்கும் நான்காம் பருவமே..... *மடந்தை*
(5)
இல்லாளாய்,
வேறு இல்லம் வலம் வந்து, கணவனுடன் கலந்து
இன்பம் நுகர்ந்து,
உறவுக்குள் உறவாகி ,
பிள்ளைகளுக்கு
நல்லதொரு தாயாகி,
தாய் விட்டு நினைவுகளை
தூக்கணாங்குருவி கூடுகளாக்கி, "மக்கள் சுற்றமும்
மங்கல மனையும்
மான் போல் மானமும்
கொண்டவளாம்
வாழ்வின் பேரருள் பதினாறெனவே வரிசைகள் யாவும் கண்டவளாம் தாய்மை/வாய்மை /நேர்மையோ
தினம் தானே தலையாய்
நின்றவளாம்... தீர்க்க சுமங்கலி வாழ்கவே!" எனும் பாடலுக்கு
முத்தாய்ப்பாகி ,
சிறிதளவு அழகு குன்றி ,
இறைமை/பொறுமை இரண்டினை
நெஞ்சில் தாங்கி ,
பொறுப்பினை அறிந்தே
25 வயதினை அடையுமே
ஐந்தாம் பருவமான ......*அரிவை*
(6)
இல்லாள் எனும்
இல்லறத்து அறிவு சேர, அறிந்தவைகளைக் கோர்த்து, தெரிந்தவைகளை செயலாற்றி,
பெற்ற பிள்ளைகளுக்கு வழிகாட்டி, வாழ்க்கை விளையாட்டில்
சதுரங்க காய்களை
சாமர்த்தியமாய் நகர்த்தி ,
"காலங்களில் அவள் வசந்தம் கலைகளிலே அவள் ஓவியம் மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை" பாடலுக்கு நாயகியாகி,
மகளைக் கட்டிக் கொடுத்து
சம்பந்தி ஆகி,
மகனுக்கு பெண் எடுத்து
மாமியாராகி ,
நடந்தவை/நடப்பவை
யாவும் தெரிய வர ,
ஆறாம் பருவத்தை
அணிகலனாய் ஏற்குமே
25 -40 வயதில் உள்ள ....*தெரிவை*
(7)
குடும்பம் ஒரு கோவில்
என்பதை உணர்ந்து ,
கொடுக்கல்/வாக்கல்
வாணிபத்தில் வளம் சேர்த்து ,
பிணி என்னும் கால
நிகழ்வில் பங்கேற்று,
இறக்கும் முன் காசியாத்திரை
போக நினைத்து,
"பூந்தேரிலே நீ ஆடவே
உண்டான அன்பே
ஒரு ராஜாங்கம்!
மானே உன் வார்த்தை ரீங்காரம்
மலரே என் நெஞ்சில் நின்றாடும் முத்தே என் முத்தாரமே!"
என்று பாடியே
பேரன்/பேத்தி வளர்த்து
ஆயா/கிழவி/பாட்டி
எனும் பெயர்களை வாங்கி,
தனது அனுபவங்களை
அடுத்த தலைமுறைகளுக்கு வில்லங்கம் இல்லாமல்
கொண்டு சேர்த்து,
40 வயதுக்கு மேல் அமைந்த
ஏழாம் பருவமே....*பேரிளம் பெண்*
இப்படியான
ஏழு பருவங்களை
ஏற்றமெனக் கடந்து
பார்த்தே ஆருடம் சொல்லி பார்க்காமலே காலம் கணித்து
கடந்த பாதை நினைவு கூர்ந்து பரிசலாய் குடும்பத்தை
கரை சேர்க்கும் பெண்ணே!
நீ அகவை 60 கடந்து
மூத்த குடிமகளே ஆனாலும்
எம் தேசத்தின் பார்வையிலே
என்றும் கௌரவமான
அழகான
ஞான செருக்கு மிகு
பேரிளம் பெண்ணே!
இனிவரும் காலங்களில்
நீண்ட ஆயுள்/நிறைந்த ஆரோக்கியம் கிடைத்திடவே
இறைவனை வேண்டிய விண்ணப்பத்தோடு
மகளிர் தின வாழ்த்துக்களை
ஏழு பருவங்களில் உள்ள பெண்களுக்கும்
அகமகிழ வழங்கும்,
- முனைவர் பெ.தமிழ்ச்செல்வி குணசேகரன்
வாலாஜாப்பேட்டை..

Comments (0)